அதானி குழுமம் மற்றும் பிரான்சின் டோட்டல் எனர்ஜிஸ் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் ,சில தொழில்முறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் இயற்கை எரிவாயுவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒரு யூனிட் எரிவாயுவின் விலை 119.90 ரூபாயிலிருந்து 82.95 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை மாற்றம் மார்ச் 16-ஆம் தேதி காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், தற்போது எரிவாயு கொள்முதல் விலை குறைந்திருப்பால் அதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எரிவாயு கொண்டு வருவதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தொழிற்சாலைகள் தங்களின் எரிவாயு பயன்பாட்டை 40 சதவீதம் வரை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அந்த அளவைத் தாண்டி பயன்படுத்தப்படும் எரிவாயுவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த கூடுதல் கட்டணமே குறைக்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி மற்றும் வீட்டு உபயோக எரிவாயுவின் விலையில் மாற்றம் செய்யாத நிலையில், தொழிற்சாலைகளுக்கான இந்த விலை குறைப்பு தொழில்துறையினருக்கு பெரும் ஆறுதலைத் தந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.