மேற்கு வங்காளத்தின் கல்யாணி விரைவுச் சாலையில், ஓடும் மோட்டார் சைக்கிளுக்கு இணையாக ஒரு செல்லப் பிராணி நாய் வலுக்கட்டாயமாக ஓட வைக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு தம்பதி பைக்கில் செல்ல, அதன் ஓரத்தில் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நிலையில் அந்த நாய் வாகனத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி ஓடுகிறது. ஒருவேளை அந்த நாய் நிலைதடுமாறி விழுந்தால், அதன் கழுத்தில் உள்ள கயிறு இறுக்கி உயிருக்கே ஆபத்தாக முடியும் அல்லது கடுமையான காயம் ஏற்படும் என விலங்கு நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அந்த நாய் சினையாக இருக்கலாம் என்ற கூடுதல் தகவல் இணையவாசிகளின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

இந்தக் கொடுமையான செயலை ‘மனிதாபிமானமற்றது’ என்று கண்டித்துள்ள சமூக வலைதளப் பயனர்கள், விலங்குகளைப் பராமரிக்கத் தெரியாதவர்கள் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர்.

வாகனங்களுக்கு இணையாக நாய்களை ஓடவிடுவது அவற்றிற்கு மூச்சுத்திணறல், உடல் சோர்வு மற்றும் விபத்துகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

“>

 

செல்லப் பிராணிகளைப் பொறுப்புடனும், அன்புடனும் நடத்த வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.