புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்கினால் ‘சி-விஜில்’ செயலி மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அதன் மீது ஒரு மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் எச்சரித்துள்ளார்.

மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் 5000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 10 கம்பெனி தொழில் பாதுகாப்புப் படைகளும், 4000 போலீசாரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், முறையற்ற விளம்பரங்களைத் தடுக்கக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவுவதைக் கண்காணிக்க ‘மெய்ப்பொருள்’ என்ற செயலியும் பயன்படுத்தப்பட உள்ளது.

தேர்தல் களம் தயார் நிலையில் உள்ள சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீல் சேர் மற்றும் தன்னார்வலர்கள் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் 30 சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இன்றி எந்தவித விளம்பரமும் செய்யக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.