தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் உறைவிட மருத்துவராக வேலை பார்த்த நிலையில் தற்போது ஓய்வு பெற்று வந்தார். இவருடைய மொபைலுக்கு புதிய நம்பரில் இருந்து வீடியோ கால் அழைப்பு ஒன்று வந்தது. இதையடுத்து பெண் மருத்துவர் அந்த வீடியோ கால் அழைப்பை எடுத்து பேசியபோது எதிரில் தோன்றிய நபர் போலீஸ் உடையில் இருந்துள்ளார்.
மேலும் அந்நபர் சுப்ரீம் கோர்ட், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் முத்திரையிட்ட ஆவணங்களை காட்டி நீங்கள் ஒருவரை கடத்தியதாக புகார் வந்திருக்கிறது. அதன்படி உங்கள் மீது வழக்குபதிவு செய்து தற்போது டிஜிட்டல் முறையில் கைது செய்திருக்கிறோம் என்று தெரிவித்தார். அதுமட்டுமின்றி நாங்கள் கேட்கும் பணத்தை நீங்கள் கொடுத்து விட்டால் இதிலிருந்து தப்பித்து விடலாம் என அந்த நபர் தெரிவித்துள்ளார். இதனால் பயந்துபோன பெண் மருத்துவர் தன் வங்கிக் கணக்கிலிருந்து 6 லட்சத்து 60 ஆயிரத்தை நபர் குறிப்பிட்ட பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றினார்.
அதனைத்தொடர்ந்து மீண்டும் வீடியோ கால் வந்ததோடு பெண் மருத்துவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெண் மருத்துவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பெண் மருத்துவரை மிரட்டிய சைபர் கிரைம் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இவ்வாறு பெண் மருத்துவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
