ஆந்திர மாநிலம், ராஜ மகேந்திரவரத்தைச் சேர்ந்த வேணுகோபால் மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி ஆகியோர், கடந்த 2016-ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த தங்கள் மகன் வேத சாய் தத்தா (வயது 13) மீதான தீராத அன்பின் வெளிப்பாடாக நெகிழ்ச்சி முடிவை எடுத்தனர்.
மகனின் பிரிவால் மீளாத துயரில் இருந்த அவர்கள், கிழக்கு கோவதாரி மாவட்டம், கொருக்கொண்டா அடுத்த கனுப்பூரில் உள்ள விவசாய நிலத்தில் மகனின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு நினைவிடத்தை அமைக்கத் தீர்மானித்தனர்.
அதன்படி, சுமார் ரூ.45 லட்சம் செலவில், முழுக்க முழுக்க பளிங்கு கற்களைப் பயன்படுத்தி ‘வேத சாய் தத்தா மந்திர்’ என்ற பெயரில் அழகிய நினைவிடம் கட்டப்பட்டதுடன், சுற்றிலும் பூந்தோட்டமும் அமைத்துள்ளனர்.
மகனின் நினைவாக ‘ஓம்காரேஸ்வரர் அறக்கட்டளை’ நிறுவி, இதுவரை ரூ.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் 5-ஆம் மற்றும் 19-ஆம் தேதிகளில் அன்னதானமும் வழங்கி, தங்கள் மகனை தெய்வமாகப் போற்றி வருகின்றனர்.
