கர்நாடகாவில் நவம்பர் 20 ஆம் தேதி மாநில அரசு பிறப்பித்த மாதவிடாய் விடுப்பு கொள்கை உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் விரிவாக விசாரிக்கவுள்ளது. பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜனவரி 20, 2026 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

நேற்று முன்தினம் (டிசம்பர் 9 ஆம் தேதி) வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆரம்பத்தில் இந்த கொள்கை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இருப்பினும், சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் ஷஷி கிரண் ஷெட்டி நீதிமன்றத்தில் ஆஜராகி, தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரினார்.

அவரது வாதங்களைத் தொடர்ந்து, நீதிமன்றம் இடைக்காலத் தடையை விலக்கிக் கொண்டு, இந்த விவகாரத்தை மேலும் விசாரிக்க சம்மதம் தெரிவித்தது.

நேற்று (டிசம்பர் 10 ஆம் தேதி) வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தலைமை வழக்கறிஞர் ஷெட்டி, இந்தக் கொள்கை ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும், முறையான பரிசீலனைக்குப் பிறகே அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் வாதிட்டார்.

மேலும், இது பணியிடங்களில் மனிதநேயமான சூழ்நிலைகளை உறுதி செய்கிறது எனவும், சமத்துவ உரிமையை மேம்படுத்துகிறது எனவும் மாநில அரசு தனது ஆட்சேபனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கொள்கை, தொழிற்சாலைகள் சட்டம், 1948 உட்பட ஐந்து முக்கிய தொழிலாளர் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழில்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கும் ஒரு நாள் விடுப்பு அளிக்க கர்நாடக அரசு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.