குருகிராம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில், தனது தோழியுடன் தங்கியிருந்த 56 வயது நபர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். சோஹ்னாவைச் சேர்ந்த இவர், ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார்.
ஹோட்டல் அறையில் இருந்தபோது அவருக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், மருத்துவ உதவி கிடைப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அறையில் பாலியல் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளின் காலி உறைகளை போலீஸார் கண்டெடுத்துள்ளனர்.
இந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே மாரடைப்பிற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உயிரிழந்த நபரின் மகனுக்கு வரும் மார்ச் 12-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் வீட்டில் விறுவிறுப்பாக நடந்து வந்தன. தற்போது திருமண வீடு சுடுகாடாக மாறியுள்ளது.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இதுபோன்ற மாத்திரைகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். தற்போது உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
