ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது, இது இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதால், பொறுமை இழந்த அமீரகம் ஈரானுக்கு எதிராகப் போரில் குதிக்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இதுவரை சுமார் 2,200 தாக்குதல்களைச் சந்தித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம், தகுந்த பதிலடி கொடுக்கத் திட்டமிட்டு வருவது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஒருவேளை ஐக்கிய அரபு அமீரகம் இந்தப் போரில் நேரடியாகப் பங்கேற்றால், அங்கிருக்கும் சுமார் 42 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.
அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பதால், போர் மூண்டால் அவர்களைப் பாதுகாப்பாக மீட்பது இந்தியாவிற்குப் பெரும் சவாலாக அமையும். எரிசக்தி நெருக்கடி ஒருபுறம் இருக்க, லட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், இந்தப் போரைத் தடுக்க இந்தியா தீவிர ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
