அமெரிக்க கடற்படையின் பெருமையாகக் கருதப்படும் உலகின் மிகப்பெரிய மற்றும் புதிய விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘USS ஜெரால்டு ஆர். ஃபோர்டு’, 9 மாத தொடர் மிஷனுக்குப் பிறகு தற்போது குரோஷியாவின் ஸ்ப்ளிட் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஈரான் மற்றும் செங்கடல் பகுதிகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கிய இந்த ராட்சத கப்பலில், சமீபத்தில் நடந்த ஒரு விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 12-ம் தேதி, செங்கடல் பகுதியில் மிஷனில் இருந்தபோது, எதிர்பாராத விதமாக கப்பலின் லாண்டரி ரூமில் தீ விபத்து ஏற்பட்டது. எதிரிகளின் தாக்குதலால் அல்லாமல், கப்பலின் உள்ளே ஏற்பட்ட இந்த விபத்தில் 3 வீரர்கள் காயமடைந்தனர்; சுமார் 200 வீரர்கள் நச்சுப் புகையினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இந்தத் தீ விபத்து மட்டுமல்லாமல், கப்பலில் இருந்த சுமார் 650 கழிவறைகளும் அடிக்கடி பழுதாகி வீரர்களுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 5000-க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 75-க்கும் மேற்பட்ட அதிநவீன போர் விமானங்களுடன் கடலில் ஒரு மிதக்கும் நகரமாகவே காட்சியளிக்கும் இந்த அணுசக்தி போர்க்கப்பல், இப்போது பராமரிப்பு பணிகளுக்காக குரோஷியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக உள்ள குரோஷியாவுடன் உறவை வலுப்படுத்தவும், தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்யவும் இந்தத் தற்காலிக ஓய்வு எடுக்கப்பட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த 11 விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான இதற்கே இந்த நிலையா என இணையவாசிகள் வியப்புடன் பதிவிட்டு வருகின்றனர்!
