தாய்லாந்து நாட்டின் கிராபி (Krabi) பகுதிக்குச் சுற்றுலா சென்ற தம்பதிக்கு, அவர்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு திகில் அனுபவம் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலேயே ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 5 மணி அளவில் ஒரு படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், ஏதோ ஒன்று தனது கழுத்தில் ஊர்ந்து செல்வதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்துள்ளார்.

முதலில் அது கனவு என்று நினைத்தாலும், கண் விழித்துப் பார்த்தபோது தலையணைக்கு அருகிலேயே ஒரு பிரம்மாண்ட கருப்பு நாகப்பாம்பு (Cobra) சீறிக்கொண்டிருப்பதைக் கண்டு அலறியடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

அடுத்த படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது துணைவர், முதலில் இதை ஏதோ பேய் பயம் அல்லது கெட்ட கனவு என்று நினைத்து அலட்சியப்படுத்தியுள்ளார்.

ஆனால், “பாம்பு.. என் கழுத்து மேல பாம்பு ஊர்ந்து போகுது!” என்ற அலறல் சத்தம் கேட்டதும் அவரும் பதறியடித்து எழுந்துள்ளார். உடனடியாகப் பாம்பு பிடிக்கும் வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு வந்த நிபுணர், படுக்கைக்கு அடியில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள அந்த ஆக்ரோஷமான ராஜநாகத்தைச் சுமார் அரை மணி நேரம் போராடிப் பிடித்தார்.

அந்தப் பாம்பு பிடிக்கும் வீரரையே தாக்க முயன்ற அந்தப் பாம்பின் வீடியோ இப்போது இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது. சுற்றுலா செல்லும் பயணிகள், குறிப்பாக வெப்பமண்டல நாடுகளுக்குச் செல்லும்போது தங்கும் அறைகளில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.