கோவை மாவட்டம் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாரதி (27). பெயிண்டர் தொழிலில் இருந்தவர். இவரது மனைவி சுவேதா (26) தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர்கள் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதியருக்கு கிரேஷ் (9), கேப்ரியல் (7) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

சில மாதங்களாக சுவேதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படும் பாரதி, இதனை தொடர்ந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். சுவேதா தனது இரு குழந்தைகளுடன் ஏ.பி.டி. ரோட்டில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

நேற்று காலை குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற சுவேதா, பின்னர் தன் வேலைக்குச் செல்ல  நடந்துச் சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த பாரதி அவரை வழிமறித்து தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு சுவேதா மறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் சுவேதா அங்கிருந்து சென்றபோதும், பாரதி பின்தொடர்ந்து சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தகராறு தீவிரமாகி, ஆத்திரம் அடைந்த பாரதி, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து சுவேதாவை குத்த முயன்றார். சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து தடுக்க முயன்றபோதும், “அருகில் வந்தால் குத்திவிடுவேன்” என பாரதி மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஆத்திரம் அடைந்த பாரதி, சுவேதாவின் வயிறு உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் குத்தினார். கடும் வலியில் சுவேதா அங்கேயே சரிந்து விழுந்தார். பின்னரும் கொந்தளித்த பாரதி, உயிருக்கு போராடிய சுவேதாவை அருகிலுள்ள சாக்கடை கால்வாயில் தள்ளி, கால் வைத்து நெரித்ததால் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் உடலை சாலையில் இழுத்து வைத்து அங்கேயே அமர்ந்திருந்த பாரதியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். சுவேதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. பாரதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொடூர சம்பவம் பொள்ளாச்சி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.