மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (31), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர்கள் அஜித்கண்ணா மற்றும் பிரகாஷ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்கள் மூவர் மீதும் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தகவல் வந்ததால், நேற்று காலை அண்ணாநகர் போலீசார் மூவரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மதுரை வண்டியூர் அம்மா திடல் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து போலீசார் மூவரிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்களை அண்ணாநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல போலீசார் முடிவு செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றியபோது, திடீரென தினேஷ்குமார் தப்பி ஓடியதாகவும், போலீசார் அவரை விரட்டிச் சென்றதாகவும் தெரிகிறது. அப்போது ஓடி சென்ற தினேஷ்குமார், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் குதித்ததாகவும், சகதியில் சிக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் நடத்தியபோது, தினேஷ்குமார் சேற்றில் சிக்கிய நிலையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் தினேஷ்குமார் மரணத்தை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர்.
“தினேஷ்குமாரை போலீசார் அடித்து கொன்று, உடலை கால்வாயில் போட்டுவிட்டு நாடகம் ஆடுகின்றனர்” என குற்றம் சாட்டிய அவர்கள், சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக கைது செய்து, கொலை வழக்குப் பதிவு செய்யக் கோரினர். இதையடுத்து அண்ணாநகர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
