பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு கால்பந்து போட்டியைப் பார்க்கச் சென்ற சிறுவன் ஒருவன், நேரலை தொலைக்காட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது சிக்கிக்கொண்ட சம்பவம் இணையதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சாமி ஸ்காட் (9) என்ற சிறுவன், நியூகேஸில் யுனைடெட் அணியின் தீவிர ரசிகன். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற லீக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தனது தந்தை மார்க் உடன் இணைந்து நேரில் சென்று போட்டியைப் பார்த்துள்ளார். ஆனால், அன்றைய தினம் அந்தச் சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என அவரது தாயார் பள்ளிக்குத் தகவல் தெரிவித்து விடுப்பு எடுத்துள்ளார்.
போட்டியின் போது ஆண்டனி கார்டன் கோல் அடித்தவுடன், அங்கிருந்த கூட்டத்தை நோக்கித் தொலைக்காட்சிக் கேமராக்கள் திரும்பின. அப்போது சாமி ஸ்காட் மிகுந்த உற்சாகத்துடன் குதித்துக் கொண்டாடிய காட்சி ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பானது. இதைப் பார்த்த சிறுவனின் நண்பர்களும் உறவினர்களும் உடனடியாகத் தந்தைக்குத் தகவல் அனுப்பினர்.
இது குறித்து அவரது தந்தை மார்க் கூறுகையில், “நாங்கள் டிவியில் தெரிந்தது எங்களுக்குத் தெரியாது. திடீரென எனது அலைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகளைப் பார்த்தபோதுதான் நேரலையில் நாங்கள் சிக்கியது தெரிந்தது” என்றார்.
இந்த வீடியோ ஆதாரத்தைக் கண்ட பென்டன் டீன் தொடக்கப்பள்ளி உடனடியாகக் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது. பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், “உடல்நலக் குறைவு எனக் கூறி விடுப்பு எடுக்கப்பட்ட ஜனவரி 7-ஆம் தேதி, மாணவன் லண்டனில் கால்பந்து போட்டியில் பங்கேற்றது வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. எனவே அந்த விடுப்பு முறைப்படியாக அங்கீகரிக்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரர் பீட்டர் கிரவுச் போன்றவர்கள், “வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளைச் சேகரிக்கச் சென்ற அந்தச் சிறுவனை மன்னித்து விட வேண்டும்” என ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், மற்றுமொரு தரப்பினர் பள்ளிக்குத் தவறான தகவல் அளித்துச் சென்றது கண்டிக்கத்தக்கது என்றும், நேர்மை அவசியம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
