அமெரிக்க நீதித்துறை அண்மையில் வெளியிட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குறித்துப் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, 2013-ஆம் ஆண்டு காலப்பகுதியில் பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதன் மூலம் அவருக்குப் பால்வினை நோய் ஏற்பட்டதாகவும் ஜெப்ரி எப்ஸ்டீன் தனது மின்னஞ்சல் வரைவுகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தை மறைக்க பில் கேட்ஸ் தன்னிடம் மருந்துகளைக் கோரியதாகவும், அதைத் தனது அப்போதைய மனைவி மெலிண்டாவுக்குத் தெரியாமல் ரகசியமாக வழங்கத் திட்டமிட்டதாகவும் எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சல்களில் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மெலிண்டா பிரஞ்சு கேட்ஸ், இத்தகைய தகவல்கள் வெளியாவது தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கிளறுவதாகத் தெரிவித்துள்ளார். “இந்தக் கேள்விகளுக்கு என் முன்னாள் கணவர்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இருப்பினும், பில் கேட்ஸ் தரப்பு இந்தத் தகவல்களை முற்றிலும் மறுத்துள்ளது. எப்ஸ்டீன் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், பழிவாங்கவும் இத்தகைய அபாண்டமான பொய்களைப் பரப்பியதாக பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
