பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பாதுகாப்புப் படைகள் பலவீனமாக இருப்பதை அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
பாகிஸ்தான் தேசிய சட்டசபையில் உரையாற்றிய கவாஜா ஆசிப், பலூசிஸ்தானின் நிலப்பரப்பு மற்றும் அங்குள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து கவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:
“பாகிஸ்தானின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவீதத்திற்கும் மேல் பலூசிஸ்தான் மாகாணம் உள்ளது. பரந்த நிலப்பரப்பையும், குறைந்த மக்கள் தொகையையும் கொண்ட இந்தப் பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது பாதுகாப்புப் படைகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களைப் பாதுகாப்பதை விட, இவ்வளவு பெரிய மாகாணத்தைப் பாதுகாப்பதில் நமது ராணுவம் ரீதியாகப் பலவீனமாக இருப்பது உண்மைதான்.”
சமீபத்தில் பலூச் விடுதலை ராணுவம் (BLA) ஒரே நேரத்தில் 12 இடங்களில் நடத்திய ஒருங்கிணைந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 30-க்கும் மேற்பட்ட அரசுச் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இது பாகிஸ்தான் ராணுவத்தின் பலம் குறித்து சர்வதேச அளவில் கேள்விகளை எழுப்பியது. இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே அமைச்சரின் இந்த வாக்குமூலம் அமைந்துள்ளது.
பிரிவினைவாதக் குழுக்களுக்கும், குற்றக் கும்பல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர், “எண்ணெய் கடத்தல் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 4 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் வரை சட்டவிரோத வருமானம் ஈட்டப்படுகிறது. இதில் பழங்குடித் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பிரிவினைவாதிகள் இடையே ஒரு மோசமான கூட்டணி நிலவுகிறது” என்றார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற பலூச் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் ஏதுமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், அப்பாவி மக்களைக் கொல்லும் பயங்கரவாதிகளுடன் அரசு சமரசம் செய்துகொள்ளாது என்றும் கூறினார்.
இயற்கை வளங்கள் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையுடன் 1948-ஆம் ஆண்டு முதலே பல்வேறு காலகட்டங்களில் கிளர்ச்சிகளைச் சந்தித்து வருகிறது. பலூசிஸ்தானைப் பாகிஸ்தான் அரசு வஞ்சிப்பதாகக் கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டும் நிலையில், அங்குதான் அதிக விமான நிலையங்கள் உள்ளன என்று கூறி வளர்ச்சி குறித்த புகார்களை அமைச்சர் ஆசிப் நிராகரித்தார்.
இருப்பினும், ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே தனது நாட்டு ராணுவம் பலவீனமாக இருப்பதாக ஒப்புக்கொண்டிருப்பது பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
