சென்னைத் தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருவதற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுமதி பெற்ற பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மற்றவர்களுக்குக் கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும் தலைமைச் செயலகத்தில் புதிய கட்டுப்பாட்டுப் பலகைகள் வைக்கப்பட்டுள்ள சூழலில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள், பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக அரசை எளிதில் அணுக முடியாதபடி ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையை ஏற்படுத்திவிடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசின் நிர்வாகக் கெடுபிடிகளுக்கு எதிராகக் கூட்டணி அல்லது எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எழுந்துள்ள முதல் முக்கியக் குரலாகப் பார்க்கப்பட்டு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.