கர்நாடக மாநிலம் கலபுரகியில், 38 வயதான முக்தாபாய் என்ற பெண், தனது புகுந்த வீட்டினரால் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முக்தாபாயின் உடலில் பேய் பிடித்துள்ளதாக நம்பிய அவரது மாமனார் மற்றும் உறவினர்கள், அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். முதலில் முருரம் என்ற ஊரில் வைத்து தாக்கப்பட்ட அவர், பின்னர் பேய் ஓட்டுவதற்காக ஒரு தர்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு ‘பூதத்தை விரட்டுவதாகச் சொல்லி’ மீண்டும் சரமாரியாகத் தாக்கப்பட்டதில், அவர் நிலைதடுமாறி விழுந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முக்தாபாய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூடநம்பிக்கையின் உச்சக்கட்டத்தால் ஒரு பெண் அடித்துக் கொல்லப்பட்ட செய்தி அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய புகுந்த வீட்டினரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
