கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கர்ப்பிணி மனைவி மரணம் அடைந்த நிலையில், கணவர் தனது மனைவியின் உடல் அருகே சாப்பிட்டு, மதுபானம் அருந்தி தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரைச் சேர்ந்த 20 வயதான சிவம் சகானே பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுமனா என்ற 22 வயது பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெங்களூரு ஹெப்பல் அருகே தானிசந்திரா பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கினர். இந்த நிலையில், சுமனா மூன்று மாத கர்ப்பமாக இருந்தார்.

கடந்த புதன்கிழமை, வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்க வந்தபோது, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து, கதவை பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து ஹென்னூர் போலீசில் தகவல் அளிக்கப்பட்டது.

போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த போது, சுமனா பிணமாக அழுகிய நிலையில் கிடந்தார். அருகே மதுபான பாட்டில்கள் மற்றும் சாப்பாடுகள் காணப்பட்டன. சுமனாவின் மூக்கில் ரத்தம் உறைந்ததும் போலீசார் கவனித்தனர்.

பின்னர் விசாரணை நடத்தி அவரது கணவர் சிவமை பிடித்த போலீசாருக்கு அவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஜூலை 21-ஆம் தேதி மாலை, சுமனாவின் நட்புறவை சந்தேகித்த சிவம், கர்ப்பிணியான மனைவியை காதில் அறைந்ததாக கூறினார். பின்னர் இருவரும் வெவ்வேறு அறைகளில் தூங்கியதாகவும், மறுநாள் சுமனா விழிக்காமல் இருந்தபோதும், அவர் உயிரிழந்ததை உணராமல் சாப்பிட்டு, மது அருந்தி, அருகில் தூங்கியதாகவும் தெரிவித்தார்.

மூன்றாவது நாளில் தான் மனைவியின் உயிர் இல்லாததை உணர்ந்த சிவம், பயத்தில் வீட்டை விட்டு தப்பி ஓடியதாகவும் கூறியுள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.