கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவிலும் சில நாட்களுக்கு முன்பாகவே  பருவமழை தொடங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு, நில அதிர்வுகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.‌

இந்த நிலையில் மூணாறில் பெய்து வரும் தொடர் கன மழையினால் இரண்டு பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.‌ கேரள மாநிலம் இடுக்கியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கன‌மழை பெய்து வருகிறது.

அதிலும் குறிப்பாக மூணாறில் கடந்த 24 மணி நேரத்திற்குள் 150 மில்லி மீட்டர் மழை பெய்தது.‌ இதனால் மூணாறில் உள்ள அரசு கலைக்கல்லூரி அருகே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று‌ நிலச்சரிவில் சிக்கியது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மீட்பு படையினர் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் மீட்டனர். பின்பு இருவரையும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் உதவியாளர் முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.