கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கும், பெங்களூருவில் தண்ணீர் டேங்கர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் ஷரத் (27) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இப்பழக்கம் காதலாக மாறவே, கடந்த 6 மாதங்களாக பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் இருவரும் ‘லிவிங்-டுகெதர்’ முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இரவு இருவரும் மது அருந்தியிருந்த நிலையில், மீண்டும் இவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறிய சூழலில், ஆத்திரமடைந்த ஷரத், அனுஷாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே அனுஷா பரிதாபமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து, பதற்றமடைந்த ஷரத் வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்து விபரத்தைக் கூறியுள்ளார். வழக்கறிஞர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த ஷரத்தை இன்று (புதன்கிழமை) கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
.
