சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் ஒரு சிறுமிக்கு பல ஆண்டுகளாக இழைக்கப்பட்ட கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2018 முதல் 2025 வரை சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆறு பேர் கொண்ட கும்பல் அந்தச் சிறுமியைத் தொடர்ச்சியாகச் சீரழித்து வந்துள்ளனர்.
அச்சம் காரணமாக இத்தனை காலம் மௌனம் காத்த அந்தச் சிறுமி, சமீபத்தில் தனது தாயிடம் நடந்த உண்மைகளைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து கடந்த ஜனவரி 30-ம் தேதி பிலாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முறையான பாதுகாப்பும், சட்ட உதவியும் வழங்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை மிகத் தீவிரமாக விசாரித்து வரும் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஒரு பெரிய ஹோட்டலின் மேலாளர் என்றும், மற்றொருவர் 60 வயது முதியவர் என்றும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் அரசியல் செல்வாக்கு மிக்க நபருக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டாலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என போலீசார் உறுதி அளித்துள்ளனர்.
