மத்திய அரசின் புதிய வரி விதிப்பு காரணமாக, இன்று (பிப்ரவரி 1) முதல் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயர்கிறது. சிகரெட்டின் நீளத்தைப் பொறுத்து ஒரு சிகரெட்டிற்கு 2 ரூபாய் 5 பைசா முதல் 8 ரூபாய் 50 பைசா வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் பான் மசாலா போன்ற பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து, கூடுதல் கலால் வரி மற்றும் சுகாதார செஸ் வரியும் உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.

மெல்லும் புகையிலை மற்றும் குட்கா போன்ற பொருட்களுக்கு 82% முதல் 91% வரை மிக அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கடுமையான வரி உயர்வால், அடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் விற்பனை 6% முதல் 8% வரை குறையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் புகையிலை நுகர்வு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சில்லறை விற்பனையில் இதன் தாக்கம் புகைப்பிடிப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.