தற்போதைய காலகட்டத்தில் சாலையில் உதவி கேட்டு நிற்கும் முன்பின் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுப்பது என்பது ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது. இதனை எச்சரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த வீடியோவில், அவசரமாகச் செல்ல வேண்டும் என்று கெஞ்சி கார் ஒன்றில் லிப்ட் கேட்கும் பெண் ஒருவர், கார் ஓடிக் கொண்டிருக்கும்போதே தனது சுயரூபத்தைக் காட்டுகிறார். கார் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டுவதோடு, பணம் தரவில்லை என்றால் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி ஊரைக் கூட்டி சத்தம் போடுவேன் என்று அந்தப் பெண் மிரட்டுவது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

​இந்தக் காணொளி உண்மையில் நடந்த சம்பவம் அல்ல, ஒரு விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட ‘ஸ்கிரிப்டட்’ வீடியோ தான் என்றாலும், நிஜ வாழ்க்கையிலும் இது போன்ற மோசடிகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் ‘டேஷ்கேம்’ (Dashcam) இருந்ததால், அந்த நபர் துணிச்சலாக அந்தப் பெண்ணை எதிர்கொள்வது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. “யாரோ ஒரு சிலர் செய்யும் இத்தகைய தவறான செயல்களால், உண்மையான ஆபத்தில் இருப்பவர்களுக்குக் கூட உதவ முன்வர முடியாத நிலை ஏற்படுகிறது” என்று நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற சூழல்களில் கார் உரிமையாளர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த எச்சரிக்கை வீடியோ வலியுறுத்துகிறது.