இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய ஏ அணியை விட 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் தான் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஜூன் 15 அன்று நடந்த முத்தரப்பு தொடரின் போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி சூப்பர் ஓவரில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய ஏ அணி 265 ரன்கள் எடுக்க, இலங்கை ஏ அணியும் 50 ஓவர்களில் அதே ரன்களை எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது.

தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் இலங்கை 16 ரன்கள் எடுக்க, 17 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோரால் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த தோல்விக்குப் பிறகு, பெவிலியன் திரும்பும் போது இலங்கை வீரர்கள் வைபவ்வை நோக்கி ஏதோ கூற, கோபமடைந்த வைபவ் அவரை தள்ளியுள்ளார்; பதிலுக்கு இலங்கை வீரரும் அவரைத் தள்ளியதால் மைதானத்தில் பெரும் வாக்குவாதமும் பரபரப்பும் ஏற்பட்டது.

மைதானத்தில் ஏற்பட்ட இந்த மோதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு நேர்மாறாக வைபவ் சூர்யவன்ஷி முதியவர் ஒருவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் மற்றொரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. வைபவ் காலில் விழுந்து ஆசி பெற்ற அந்த நபர், இலங்கையின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனான அனுரா தெனகூன் ஆவார்.

இவர் 1975 ஆம் ஆண்டு நடந்த முதலாவது உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தம்புள்ளை மைதானத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிவுரை வழங்கிய அனுரா தெனகூன், “மற்றவர்கள் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றி யோசிக்காதே, உன்னுடைய விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்து” என்று கூறியுள்ளார். இப்போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 14 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்திருந்தார்.