“இங்கே வேலை பார்க்க உங்களுக்குக் கஷ்டமா இருந்தா ஓப்பனா சொல்லிடுங்க  நானே உங்களுக்குச் சந்தோஷமா டிரான்ஸ்பர் வாங்கித் தந்துடுறேன்!” என்று நாமக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

குறிப்பாகத் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள அரசுத் துறைகளில் பொதுமக்கள் யாரிடமிருந்தும் லஞ்சம் வாங்குவதோ அல்லது அதற்காக மக்களை அலைக்கழித்துத் தாமதப்படுத்துவதோ கூடாது எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்ட அமைச்சர், தானும் 15 ஆண்டுகள் ஐஆர்எஸ் (IRS) அதிகாரியாகப் பணியாற்றியவன் என்பதால் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் தனக்கு அக்குவேறானிவேறாகத் தெரியும் என்றார்.

பழைய வேலை கலாச்சாரங்களை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, தற்போதைய முதலமைச்சரின் உத்தரவுப்படி முற்றிலும் வெளிப்படையான, நேர்மையான மக்கள் சார்ந்த அரசை மட்டுமே நடத்த வேண்டும் என்றும், மீறி லஞ்ச விவகாரங்களில் சிக்கினால் விஜிலன்ஸ் மற்றும் வருமான வரித்துறை சோதனைகளால் வாழ்க்கை வேதனையாகிவிடும் என்றும் அறிவுறுத்தினார்.

‘சிஎம் ஃபண்ட், மினிஸ்டர் ஃபண்ட், எம்எல்ஏ ஃபண்ட்’ என எதுவும் கிடையாது, நாம் வாங்கும் சம்பளம் மக்களின் வரிப்பணம் என்பதை உணர்ந்து, எதிர்பார்ப்பின்றி மக்களுக்குச் சேவை செய்வதில்தான் உண்மையான மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் இருக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த மக்கள் நல அரசிற்கு அதிகாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

“>