சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு (மார்ச் 8), மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக மகளிர் அணி விழாவில் பங்கேற்ற விஜய், பெண்களுக்கான 13 அம்சத் திட்டங்களை அறிவித்தார். “தவெக ஆட்சி அமைந்தவுடன், 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
இது தற்போது தமிழக அரசு வழங்கும் ரூ.1000-த்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், திருமணத்திற்கு 1 சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை, பெண் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளையும் அவர் அள்ளி வீசியுள்ளார். மாநிலத்தின் கடன் சுமைக்குக் காரணம் ஊழல்தான் என்றும், அதனைச் சரிசெய்தால் இந்தத் திட்டங்களுக்கு நிதி தாராளமாகக் கிடைக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
விஜய்யின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, தவெக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருண் ராஜ், கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகளின் ‘இலவசத் திட்டங்களை’ கடுமையாக விமர்சித்துப் பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகத் தொடங்கியது. அந்த வீடியோவில், “பெண்களுக்கு ரூ.1000, ரூ.2000 எனப் போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கிறார்கள்; இதற்கு எங்குதான் முடிவு?” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
கட்டணமில்லா சேவைகள் வேண்டுமா?
தவெக நிர்வாகி VS தவெக தலைவர்#SunNews | #TVKVijay | #BusRide | #WelfareSchemes pic.twitter.com/5CuwnPXtWm— Sun News (@sunnewstamil) March 8, 2026
“>
தற்போது அதே பாணியில் விஜய் ரூ.2500 அறிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தவெக-வின் இரட்டை நிலைப்பாட்டை விமர்சித்து வருகின்றனர். இதனால், ஒருபுறம் உற்சாகத்தில் இருக்கும் தவெக தொண்டர்கள், மறுபுறம் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்க வேண்டிய இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
