பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோபி வோஸ்லாட் (வயது 38) என்ற மாடல் அழகி, 2007 ஆம் ஆண்டு ‘மிஸ் பிரான்ஸ்’ அழகிப் போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர். பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு இருந்தாலும், பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்ற மாடலாகவும், ‘தி பெர்பெக்ட் டேட்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்த நடிகையாகவும் பெயர் வாங்கியுள்ளார்.

சோபி தற்போது தனது கணவர் பேபியன் போடமினுடன் செயிண்ட் ஜூலியன் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஜூலை 9ஆம் தேதி, சோபியை நேரில் காண்பதற்காக பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் என்ற நபர் சுமார் 500 கி.மீ தூரம் பயணித்து, நேராக சோபியின் வீட்டுக்குச் சென்றார்.

சோபியுடன் பல வாரங்களாக வாட்ஸ்அப்பில் உரையாடி வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் அவர் கூறினார். ஆனால், சோபி திருமணமானவர் என்பதையும் தனது கணவருடன் வாழ்ந்து வருகிறேன் எனத் தெரிவித்ததும், மைக்கேல் அதிர்ச்சி அடைந்தார்.

முதலில் சோபியின் திருமணத்தை நம்ப மறுத்த மைக்கேல், பின்னர் அவரது கணவர் பேபியனை நேரில் சந்தித்தபோது தான் ஏமாற்றப்படுத்தப்பட்டதை உணர்ந்துள்ளார். “நான் முட்டாளாக்கப்பட்டுவிட்டேன்” என வருத்தத்துடன் கூறிய மைக்கேலின் இந்த உரையாடல் அனைத்தையும் சோபியின் கணவர் வீடியோவில் பதிவு செய்து, அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், சோபியுடன் திருமணம் செய்வதற்காக அவரது அனுமதி பெற்ற பிறகு தான் வந்ததாகவும், சோபிக்கு 35,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.30 லட்சம்) அனுப்பியதாகவும் மைக்கேல் கூறுகிறார். மேலும், அவர் சோபியுடன் நடந்த வாட்ஸ்அப் உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களையும் காட்டியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சோபி, “நான் அவ்வாறு யாருடனும் பேசவில்லை. யாரோ மர்ம நபர்கள் எனது பெயரில் போலி கணக்கு உருவாக்கி மைக்கேலை மோசடி செய்துள்ளனர்” என்று தெரிவித்தார். இதற்கான ஆதாரங்களை வைத்து மைக்கேல் போலீசில் புகார் அளிக்கும்படி சோபியும் அவரது கணவரும் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை மைக்கேல் எந்தவிதமான புகாரும் அளிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தன்னுடைய காதல் உணர்வுகளால் 500 கி.மீ பயணம் செய்து வந்த மைக்கேல், பணத்தையும் காதலையும் இழந்து, மனமுடைந்து வீடு திரும்பிய சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்துக்குள்ளாகியுள்ளது. இது போலி கணக்குகள் மூலம் நடைபெறும் இணைய மோசடிகளை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நினைவுபடுத்தி, பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.