தேனி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தம்மணம்பட்டியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரு மகன்களும், 17 வயதான பூவிகா என்ற மகளும் உள்ளனர். பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (பிளஸ்-1) படித்து வந்தார்.
கடந்த நவம்பர் 21-ஆம் தேதி பூவிகாவின் பிறந்தநாள் ஆகும். அன்றைய தினம் அவரது பெற்றோர் மகளுக்குப் புத்தாடை மற்றும் பிறந்தநாள் கேக் ஆகியவற்றை வாங்கித் தரவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த பூவிகா, தன் தாய்-தந்தையிடம் புத்தாடை மற்றும் கேக் வாங்கித் தராதது குறித்து சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலையில் பூவிகா திடீரென வாந்தி எடுத்துள்ளார்.
இதுகுறித்து பெற்றோர் விசாரித்தபோது, “பிறந்தநாளுக்கு எதுவும் செய்யாததால் விஷம் குடித்துவிட்டேன்” என்று பூவிகா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பூவிகா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூவிகா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கூடலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளின் பிறந்தநாள் ஆசையை நிறைவேற்றாததால் நிகழ்ந்த இக்கோர சம்பவம், தம்மணம்பட்டி மற்றும் கூடலூர் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மன உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.
