தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி அந்த வாலிபர் முறைப்படி தனது மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு மனைவியை விட்டுவிட்டு, சிறிது நேரத்தில் வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் அவர் வராததாலும், அவரது மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சியடைந்த இருவீட்டு குடும்பத்தினரும் அவரைப் பல்வேறு இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர். திருமணமான 9 நாட்களிலேயே புதுமாப்பிள்ளை திடீரென மாயமான இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மணமகளின் குடும்பத்தினர்  காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த வாலிபர், தான் ஏற்கனவே உயிருக்குயிராகக் காதலித்த பெண்ணுடன் திட்டமிட்டு ஓட்டம் பிடித்தது அம்பலமானது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “மாயமான வாலிபர் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாகத் தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு வாலிபரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கட்டாயப்படுத்தி வேறு ஒரு பெண்ணை அந்த வாலிபருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால் அதிருப்தியில் இருந்த புதுமாப்பிள்ளை, திருமணமான 9 நாட்களிலேயே மனைவியைக் கழட்டிவிட்டுத் தனது காதலியுடன் தப்பியோடியுள்ளார். தற்போது தலைமறைவாக உள்ள இருவரையும் தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தனர். இச்சம்பவம் தேனி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.