தஞ்சாவூர் மாவட்டம் அம்மாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சரவணக்குமார் ( 27). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது, நர்சிங் மாணவியான ஸ்ரீமதி (வயது 19) என்பவரை ஓராண்டாகக் காதலித்து வந்துள்ளார். இருதரப்பு பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு திருப்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், ஸ்ரீமதி கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், சரவணக்குமாருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், மனைவியை வேலைக்குச் செல்லச் சொல்லி அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்ற ஸ்ரீமதியை, சரவணக்குமார் சமாதானம் பேசி மீண்டும் திருப்பூருக்கு அழைத்து வந்துள்ளார். இதற்கிடையே, கடந்த 29-ஆம் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட குடும்பத் தகராறில், ஆத்திரமடைந்த சரவணக்குமார் கர்ப்பிணி என்றும் பாராமல் ஸ்ரீமதியை வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீமதிக்குக் கர்ப்பம் கலைந்து, கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு வீட்டிற்குள்ளேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மனைவி இறந்த அதிர்ச்சியில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற சரவணக்குமார், மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஸ்ரீமதியின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு விரக்தியடைந்து, மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நாட்களாக வீடு பூட்டப்பட்டுக் கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரு உடல்களையும் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
