தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள ஊரில் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி அபிசதா (22). இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு மகன் உள்ளான். அபிசதா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால், பிரசவத்திற்காக இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடலூர் பசும்பொன் நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றார்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி கம்பம் அரசு மருத்துவமனையில் அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, அவர் இரண்டு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிலேயே தங்கி இருந்தார்.

சம்பவத்தன்று, அபிசதா தனது இரண்டாவது குழந்தையைத் தரையில் படுக்க வைத்துவிட்டு வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த மூத்த மகன் கால் தவறி தரையில் படுத்திருந்த குழந்தை மீது விழுந்துள்ளான். இதில் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் வந்து குழந்தை அழுதுள்ளது.

குழந்தையின் அழுகுரல் கேட்டு விரைந்து வந்த அபிசதா அதிர்ச்சியடைந்து, உடனடியாக உறவினர்களுடன் குழந்தையை கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.