தேனி பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணி ஒருவரைத் தாக்கி, அவரது புதிய செல்போன் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற துயரச் சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால், நள்ளிரவு நேரங்களில் அவரது ஊர் வழியாகச் செல்லும் பேருந்துகள் அங்கு நிற்காது என்ற காரணத்தினால், அதிகாலைப் பேருந்தில் ஊருக்குச் செல்லலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் வழக்கம்போலத் தேனி பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இரவு தங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு திருட்டுக் கும்பல், அவர் குடிபோதையில் படுத்திருப்பதாக நினைத்து அசாால்ட்டாக அவரது சட்டப் பைக்குள் கையை விட்டுத் திருட முயன்றுள்ளது.

ஆனால், நல்ல நனவு நிலையில் இருந்த அந்த நபர் தடுத்தபோது, அக்கிரமக்காரக் கும்பல் அவருடன் சண்டையிட்டு, மூக்கு உடைந்து ரத்தம் கொட்டும் அளவிற்கு அவரைப் பயங்கரமாத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த பணம் மற்றும் புதிய செல்போனைப் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவத்தை முன்வைத்து இரவு நேரப் பயணிகளுக்குப் போலீஸார் சில முக்கிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.

மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் தனிமையான பகுதிகளைத் தேர்ந்தெடுத்துத் தங்குவதாலேயே சமூக விரோதிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும்; எனவே, இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் தங்கும் சூழல் ஏற்பட்டால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகள் அல்லது கடைகளுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Muthaiah Muthaiah (@muthaiah830)

“>

அத்தோடு, தேனியில் சமீபகாலமாகப் பெண்களைக் கவர்ச்சியாகப் பயன்படுத்தி, ஆண்களுக்குச் சபல ஆசையைத் தூண்டி, அவர்களைத் தனிமையான இடத்திற்கு வரவழைத்துக் கூட்டமாகத் தாக்கி வழிப்பறி செய்யும் ‘ஹனி டிராப்’ பாணி குற்றங்களும் அதிகரித்து வருவதாகக் காவல்துறை பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இந்த விழிப்புணர்வுச் செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகிப் பொதுமக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.