பிரிட்டனின் ஒரு பகுதியைச் சேர்ந்த 42 வயது லோரி டென்மன் என்ற பெண்ணின் மூளையில் 38 ஒட்டுண்ணி புழுக்கள் நாடாப்புழுக்கள் கண்டறியப்பட்ட சம்பவம் மருத்துவ உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு ஊடகத்துறையில் பணியாற்றிய லோஅரி, மூன்று மாத சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது உணவினால் நச்சுத்தன்மை ஏற்படக்கூடாது என்பதற்காக அவர் அசைவ உணவுகளைத் தவிர்த்துள்ளார். இருப்பினும், அவர் அறியாமல் சாப்பிட்ட ஏதோ ஒரு உணவில் பன்றி இறைச்சியில் இருக்கும் டேப்வோர்ம் புழுவின் நுண்ணிய முட்டைகள் கலந்ததால் அவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த 2010ஆம் ஆண்டு உணவகம் ஒன்றின் கழிவறையில் அவரது மலத்துடன் 1 மீட்டர் நீளமுள்ள புழு வெளியேறியதை முதன்முதலாகக் கண்டுள்ளார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு கடுமையான தலைவலி மற்றும் திடீர் பக்கவாதக் குறைபாடுகள் காரணமாக அவர் அவசர ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனையில், அவரது மூளையில் 38 ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு ‘நியூரோசிஸ்டிசர்கோசிஸ்’ என்ற அரிய மூளை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த அதிர்ச்சித் தகவலால் லோரியும் அவரது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போன நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர ஸ்டெராய்டுகள் மற்றும் மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நோயின் தாக்கத்தால் அவரது மூளையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு, அவருக்கு அடிக்கடி மனக்குழப்பம், மாயத்தோற்றங்கள் மற்றும் கடுமையான மனச்சோர்வு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டன.
ஒரு கட்டத்தில் தனது 20 ஆண்டு கால தோழியைப் பார்த்து ஐந்து வயதுக் குழந்தை போல தரையில் ஊர்ந்து விளையாடும் அளவிற்கு அவரது மனநலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. எனினும், பலஆண்டுகால தொடர் போராட்டத்திற்குப் பிறகு, எந்த அறுவை சிகிச்சையும் இன்றி மருந்து மாத்திரைகள் மூலமாகவே அவரது மூளையில் இருந்த புழுக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு தற்பொழுது அவை செயலிழந்து போயுள்ளன.
2017ஆம் ஆண்டிற்குப் பிறகு லோஅரிக்கு எந்தவொரு பக்கவாத பாதிப்பும் ஏற்படாத நிலையில், படிப்படியாக குணமடைந்து 2022 முதல் அவர் மீண்டும் தனது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார். தற்பொழுது தனது இந்த கசப்பானஅனுபவத்தை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அவர் பகிர்ந்து வருகிறார்.
