பாலிவுட் நடிகை திஷா பதானியின் தந்தையும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான ஜெகதீஷ் பதானியின் வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிர்ச்சிக்கான சம்பவம் பரேலியில் அரங்கேறியுள்ளது.
சனிக்கிழமை, ANI செய்தி நிறுவனம் வழங்கிய தகவலின்படி, சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைந்து 8 முதல் 10 சுற்றுகள் வரை சுட்டதாக ஜெகதீஷ் பதானி தெரிவித்தார்.
“துப்பாக்கிகள் உள்நாட்டு தயாரிப்புகள் அல்ல. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவையாக இருக்கலாம் என சந்தேகம். துப்பாக்கிச் சூடில் நான் மற்றும் என் குடும்பத்தினர் பாதிக்கப்படவில்லை என்பது தான் நன்றாக இருக்கிறது. ஆனால் இது மிகச் சாதாரணமான விஷயம் அல்ல. இது திட்டமிட்ட தாக்குதல்,” என அவர் கூறினார். மேலும், சமூக ஊடகங்களில் “கோல்டி பிரார்” என்ற நபர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக தெரிகிறது, ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லை என்றும் தெரிவித்தார்.
இது பற்றி காவல்துறையினரின் தகவலின்படி, அதிகாலை 3.30 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும், போலீஸ் அதிகாரிகள் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். “ஓய்வு பெற்ற சிஓ ஜெகதீஷ் பதானியின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததுடன், உடனடியாக பல்வேறு பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என பரேலி எஸ்எஸ்பி அனுராக் ஆர்யா தெரிவித்தார்.
மேலும், விசாரணையை விரைவாக நடத்துவதற்காக, எஸ்பி சிட்டி மற்றும் எஸ்பி கிரைம் கீழ் ஐந்து தனி விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளை பிடிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதிபடுத்தினார். “நான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துள்ளேன்,” என்றும் அவர் கூறினார். மேலும் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் திரையுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
