நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தற்போது அவர் செய்த ஒரு நல்ல செயல் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்துள்ளது. ஒரு அரிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு குழந்தையின் மருத்துவச் செலவுகளை ஏற்க முன்வந்துள்ளார் ஜாக்குலின். இந்தக் குழந்தையை நேரில் சந்தித்து, அவருடன் நேரம் செலவழித்து, அவரது மருத்துவத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்ய உறுதியளித்துள்ளார். இந்த நற்செயலால், ரசிகர்கள் அவரைப் பாராட்டி, மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜாக்குலின் ஒரு சிறு குழந்தையுடன் விளையாடுவதையும், அவருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவதையும் காணலாம். முகமது என்ற அந்த குழந்தை, அரிய வகை நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவை மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹுசைன் மன்சூரி பகிர்ந்துள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ஜாக்குலினுக்கு நன்றி தெரிவித்து, குழந்தை விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த ஜாக்குலின், முகமதுவுக்காகவும் அவரது குடும்பத்திற்காகவும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறினார்.
முகமது என்ற இந்தக் குழந்தைக்கு ஹைட்ரோசெபாலஸ் என்ற அரிய நோய் உள்ளது. இதில், மூளையில் திரவம் தேங்குவதால், மூளை திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அழுத்தம் ஏற்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஜாக்குலினின் இந்த மனிதநேயமிக்க செயல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும், குழந்தையின் குணமடைய பிரார்த்தனைகளாகவும் பல கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
