‘ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸ்’, ‘ப்யார் கா பஞ்ச்நாமா 2’, ‘உஜ்தா சாமன்’ போன்ற படங்களில் நடித்த நடிகை கரிஷ்மா சர்மா, புதன்கிழமை மும்பையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்து விபத்தில் சிக்கியுள்ளார்.

சேலை அணிந்து ரயிலில் ஏறியபோது, அது வேகமாக செல்லத் தொடங்கியதால், தன்னுடன் வந்த நண்பர்கள் ஏற முடியவில்லை என்பதை பார்த்த கரிஷ்மா, பயந்த நிலையில் குதித்ததாக தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, பின்பக்கமாக  விழுந்ததால் கடும் காயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள கரிஷ்மா, “என் முதுகில் காயம், தலையில் வீக்கம், உடல் முழுவதும் அடிபட்டுள்ளது. எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து, ஒரு நாள் கண்காணிப்பில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். வலி இருந்தாலும், நான் உறுதியாக இருக்கிறேன்.

உங்கள் பிரார்த்தனைகள் எனக்கு தேவை” என குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்தபோது அவருடன் இருந்த நண்பரும் மருத்துவமனையில் இருந்து நடிகையின் புகைப்படத்தை பகிர்ந்து, “இது நடந்ததை நம்பவே முடியவில்லை, தயவுசெய்து பிரார்த்தியுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமின்றி, ‘காமெடி சர்க்கஸ்’, ‘தி கபில் சர்மா ஷோ’, ‘ஃபியர் ஃபைல்ஸ்’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த கரிஷ்மாவின் விபத்து செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.