கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படுவதாகக் கருத்து நிலவும் நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்துள்ளது.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர், பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவரைக் கவனித்துக்கொள்ள இரண்டு நாட்கள் விடுப்பு கேட்டு தனது நிறுவன மேலாளரிடம் வாட்ஸ்அப் மூலம் உரையாடியுள்ளார்.
ஊழியரின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த மேலாளர், “இப்போது உங்களுக்கு விடுப்பு கொடுக்க முடியாது; அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?” என்று அநாகரிகமான முறையில் பதிலளித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த அந்த ஊழியர், “அது சாத்தியமில்லை. மருத்துவமனை வேலைகளும், மனைவியைக் கவனித்துக் கொள்ள வேண்டியதும் உள்ளது. அங்கிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை,” என்று உறுதியாகத் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே, அந்த மேலாளர் வேறு வழியில்லாமல் ஊழியருக்கு விடுப்பு வழங்கியுள்ளார்.
பிரசவத்தின்போது கணவர் துணை இருப்பது அவசியம் என்ற அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாமல், ஊழியரின் விடுப்புக் கோரிக்கையை நிராகரித்த இந்த மேலாளருடனான வாட்ஸ்அப் உரையாடலைப் புகைப்படத்துடன் சமூக வலைதளமான ‘ரெடிட்’டில் (Reddit) அந்த ஊழியர் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி, கார்ப்பரேட் நிறுவனங்களின் மனிதநேயமற்ற செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
