சட்டப்பேரவையில் இன்று தொழில் முதலீடுகள் குறித்த விவாதம் நடைபெற்றபோது, அதிமுக மற்றும் திமுக இடையே கடும் சொற்போர் நிலவியது. “வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எங்கே?” என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கடந்த 5 ஆண்டுகளில் போடப்பட்ட தொழில் முதலீடு ஒப்பந்தங்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிடவில்லை; அவை அனைத்தும் தற்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டன” என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
முதலீடுகள் குறித்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, வரும் பிப்ரவரி 12-ம் தேதி ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தப்போவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். “நாங்கள் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பதை அந்த மாநாட்டில் உலகமே பார்க்கும். இங்கே கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் அந்த மாநாட்டிற்கு நேரில் வந்து, சாதனைகளை அங்குக் கண்டுகளிக்க வேண்டும்” என்று ஒரு ‘நச்’ அழைப்பையும் விடுத்துள்ளார்.
