தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து ஆசிரியை கழுத்தை நெறித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய மனைவியை, போலீஸார் நுணுக்கமாக விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர்.
நிஜாமாபாத் மாவட்டம், மக்லூர் மண்டலம் போர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்லட்டி ரமேஷ். இவருக்கும் சௌமியா என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20-ம் தேதி ரமேஷ் திடீரென உயிரிழந்தார். தனது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி சௌமியா கதறி அழுதுள்ளார். இதனை நம்பிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ரமேஷின் இறுதிச் சடங்குகளைச் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இஸ்ரேலில் பணியாற்றி வரும் ரமேஷின் தம்பி கேதாரிக்கு, தனது அண்ணனின் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. உடலை அடக்கம் செய்யும் போது கழுத்தில் காயங்கள் இருந்ததாக உள்ளூர் மக்கள் சிலர் கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்பினார். இதுகுறித்து மக்லூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், ஜனவரி 2-ம் தேதி வட்டாட்சியர் முன்னிலையில் ரமேஷின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ரமேஷ் மாரடைப்பால் இறக்கவில்லை என்பதும், மூச்சுத் திணறல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதியானது. இதையடுத்து போலீஸார் ரமேஷின் மனைவி சௌமியாவைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:
சௌமியா தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அங்கு உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றிய திலீப் என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களின் விவகாரம் ரமேஷுக்குத் தெரியவந்ததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் காதலுக்குத் தடையாக இருந்த கணவனைத் தீர்த்துக்கட்ட சௌமியா முடிவு செய்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரமேஷ் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, திலீப் தனது காரால் மோதி விபத்து ஏற்படுத்தினார். ஆனால், அதில் ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார்.
விடாத சௌமியா, கூலிப்படையை ஏவி கணவனைக் கொல்லத் திட்டமிட்டார். இதற்காகத் தனது தங்க மோதிரத்தை ரூ.35 ஆயிரத்திற்கு அடகு வைத்துப் பணம் கொடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 19-ம் தேதி இரவு, தூக்க மாத்திரை கலந்த தண்ணீரை ரமேஷுக்கு சௌமியா கொடுத்துள்ளார். ரமேஷ் மயங்கியதும் கூலிப்படையினரை அவர் அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வராததால், தனது காதலன் திலீப்பை வரவழைத்துள்ளார். திலீப் தனது சகோதரர் அபிஷேக்குடன் சௌமியாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.
மூவரும் சேர்ந்து மயக்கத்தில் இருந்த ரமேஷின் கழுத்தை துண்டால் இறுக்கியும், முகத்தைத் தலையணையால் அழுத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் மறுநாள் காலை ரமேஷ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைத்துள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பாக சௌமியா, அவரது காதலன் திலீப், திலீப்பின் சகோதரர் அபிஷேக் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஜிதேந்தர், ஸ்ரீராம், ராகேஷ் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பியோடிய மௌஹ்சின் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
