அரியானா மாநிலம் அம்பாலாவில், இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ (ISI) உளவு அமைப்பிற்கு கசியவிட்ட சுனில் (31) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண் பெயரில் வந்த போலி கணக்கு மூலம் சுனிலுக்கு வலைவீசிய பாகிஸ்தான் உளவுத்துறை, அவரைத் தனது ‘ஹனி ட்ராப்’ (Honeytrap) வலையில் சிக்க வைத்துள்ளது.
தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த சுனிலுக்கு, விமானப்படை தளங்களுக்குள் சென்று வர அனுமதி இருந்துள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த 6 – 7 மாதங்களாக ராணுவப் பிரிவுகளின் இருப்பிடம், வீரர்களின் நடமாட்டம் மற்றும் முக்கிய பாதுகாப்புத் தகவல்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதற்காக அவருக்குப் பணமும், சில சலுகைகளும் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் சுனிலைக் கைது செய்த அம்பாலா போலீசார், அவரது செல்போன் உரையாடல்கள் மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நாட்டுப் பாதுகாப்புடன் விளையாடிய இந்தச் சம்பவம் அம்பாலாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
