சனிக்கிழமை தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க (USA) அணியின் பந்துவீச்சு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ஹர்மீத் சிங்கின் அபார பந்துவீச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பையில் பிறந்த ஹர்மீத் சிங், தனது 9 வயதிலேயே ஜாம்பவான்களின் பார்வையில் விழுந்தவர். அவரது பந்துவீச்சு முறையையும், பந்தை காற்றில் ‘பிளைட்’ செய்யும் விதத்தையும் பார்த்த முன்னாள் இந்திய வீரர் திலீப் சர்தேசாய், இவரைப் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடியுடன் ஒப்பிட்டுப் பேசினார். ரமாகாந்த் ஆச்ரேக்கர் உதவித்தொகையைப் பெற்ற முதல் வீரரும் இவரே.
19 வயதிற்குள்ளேயே இந்திய அணிக்காக இரண்டு முறை (2010 மற்றும் 2012) அண்டர்-19 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாக 2012-இல் இந்தியா உலகக்கோப்பை வென்றபோது, ஹர்மீத் சிங்கின் எகானமி ரேட் (3.02) அந்தத் தொடரின் சிறந்த ஒன்றாக இருந்தது.
ரஞ்சி கோப்பை அறிமுக ஆட்டத்திலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ஹர்மீத் சிங்கின் வாழ்க்கையில், 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்டப் புகார் பெரும் புயலைக் கிளப்பியது. ஒரு சூதாட்டத் தரகர் இவரது பெயரைப் பயன்படுத்தியதால் பிசிசிஐ விசாரணை நடத்தியது. இறுதியில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் முழுமையாக விடுவிக்கப்பட்டார்.
இருப்பினும், இந்த விவகாரம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் தடையை ஏற்படுத்தியது. மும்பை தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்ட அவர், மெல்ல மெல்ல இந்திய கிரிக்கெட்டில் இருந்து காணாமல் போனார்.
இந்தியாவில் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், முயற்சியைக் கைவிடாமல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார் ஹர்மீத். அங்கு தனது திறமையை நிரூபித்து தேசிய அணியில் இடம் பிடித்தார். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில், இந்திய அணிக்கு எதிராக சிவம் துபே மற்றும் அக்சர் படேல் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் வாழ்க்கையில் எத்தனை ஏற்ற இறக்கங்கள் வந்தாலும், நம்பிக்கையை மட்டும் கைவிடக்கூடாது“ என்பதற்கு 34 வயதாகும் ஹர்மீத் சிங்கின் இந்த கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.
