தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில், களத்தில் நடக்கும் அதிரடிகளை விட, கேலரியில் நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு, உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தேநீர் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய விறுவிறுப்பான ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியைக் காண ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் விஐபி பகுதியில் அமர்ந்திருந்தனர். அப்போது, முகேஷ் அம்பானி மிகவும் எளிமையாக ஒரு கோப்பைத் தேநீரை ரோகித் சர்மாவிடம் நீட்ட, அவர் அதனைப் பெற்றுக்கொண்டு உரையாடும் காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் என்ற உறவைத் தாண்டி, இருவருக்கும் இடையே இருக்கும் தனிப்பட்ட நட்பு மற்றும் மரியாதையை இந்தப் புகைப்படம் பறைசாற்றுவதாக ரசிகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த ஒற்றைப் புகைப்படம் எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நெகிழ்ச்சியான கமெண்ட்கள் ஒருபுறம் இருந்தாலும், நெட்டிசன்கள் தங்களது பாணியில் மீம்ஸ்களைத் தட்டிவிட்டு வருகின்றனர். “பில்லியன் டாலர் டீ பிரேக்” என்றும், “அடுத்த ஐபிஎல் சீசன் பற்றிய ஆலோசனையா?” என்றும் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளால் இணையம் நிறைந்துள்ளது.
Mukesh Ambani serving tea to Rohit Sharma and Rohit Sharma refuses
Could never be Thala
😂😂😂 pic.twitter.com/5Bb2wZgRdb— Sensei Kraken Zero (@YearOfTheKraken) February 7, 2026
இந்தப் போட்டியில் அமெரிக்க அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி ஒரு கட்டத்தில் திணறியது. 2026 உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியனாகக் களம் கண்டுள்ள இந்தியா, கத்துக்குட்டி அணியான அமெரிக்காவிடம் தோற்றுவிடுமோ என்ற அச்சம் நிலவியது.
இருப்பினும், சூரியகுமார் யாதவின் அதிரடி ஆட்டம் (49 பந்துகளில் 84 ரன்கள்) இந்தியாவை மீட்டெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்தியா 161 ரன்கள் எடுக்க, பின்னர் ஆடிய அமெரிக்கா அணியால் 132 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. மேலும் இதன் மூலம் இந்தியா வெற்றியைப் பதிவு செய்தது.
