தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸை விட, இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சிறந்த ‘360 டிகிரி’ பேட்டர் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி பாராட்டியுள்ளார். அதாவது 2026 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த முக்கியமான லீக் ஆட்டத்தில், சூர்யகுமார் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் தங்கியிருந்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் பேட் செய்த இந்திய அணி, பவர்பிளேயின் முடிவில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய போது சூர்யகுமார் களமிறங்கினார். ஒருகட்டத்தில் 13-ஆவது ஓவரில் இந்தியா 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருக்கடியில் இருந்தது. அந்தச் சூழலில் தனி ஆளாகப் போராடிய சூர்யகுமார், அணியின் மொத்த ஸ்கோரில் பாதியளவு ரன்களை விளாசி இந்திய அணியின் கௌரவத்தைக் காப்பாற்றினார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 162 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், மோனாக் படேல் தலைமையிலான அமெரிக்க அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சூர்யகுமாரின் இந்த இன்னிங்ஸ் குறித்து மனோஜ் திவாரி கூறுகையில்: “ஏபி டிவில்லியர்ஸை நாம் 360 டிகிரி வீரர் என்கிறோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை சூர்யகுமார் தான் உண்மையான 360 டிகிரி ஆட்டக்காரர். டிவில்லியர்ஸ் கூட ஸ்லைஸ் செய்து தேர்டு மேன் திசையில் சிக்ஸர் அடித்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் சூர்யா அதைச் செய்து காட்டுகிறார். அவரது ஷாட் தேர்வுகள் அவர் எவ்வளவு திறமையானவர் என்பதை நிரூபிக்கிறது,” என்றார்.
2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு சூர்யகுமாரின் ஆட்டத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ‘தொடர் நாயகன்’ விருது வென்ற அவர், 2026-ஆம் ஆண்டில் இதுவரை விளையாடிய 6 சர்வதேச டி20 போட்டிகளில் 108.66 என்ற சராசரியுடன் 326 ரன்கள் குவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில், சௌரப் நெத்ராவல்கர் பந்துவீச்சில் 21 ரன்கள் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இது குறித்து முன்னாள் வீரர் முரளி கார்த்திக் கூறுகையில், “கடந்த ஆண்டு சூர்யா ஃபார்மில் இல்லாத போதும் அணி அவர் மீது நம்பிக்கை வைத்தது. திறமை என்றும் நிரந்தரமானது என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார்” என்றார்.
