தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ள ஒரு கோர விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே, விளம்பரப் பலகை அல்லது பெயிண்டிங் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு ஸ்டாண்டை இரண்டு கூலித் தொழிலாளர்கள் நகர்த்த முயன்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த இரும்பு ஸ்டாண்ட் மேலே சென்றுகொண்டிருந்த 11 KV உயர்மின் அழுத்தக் கம்பியில் உரசியுள்ளது. அடுத்த விநாடியே மின்னல் வேகத்தில் மின்சாரம் பாய்ந்ததில், அந்த இரண்டு தொழிலாளர்களும் தீப்பிடித்து, சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர்.
@Deadlykalesh pic.twitter.com/AzAvtCPN5p
— . (@6ppri) March 11, 2026
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், தொழிலாளர்கள் ஸ்டாண்டை தொட்ட அந்த நொடியே பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு உருவாவதும், அவர்கள் நிலைகுலைந்து கீழே விழுவதும் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். “பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி” என சமூக வலைதளங்களில் பலரும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
