பணம் சம்பாதிப்பதன் உண்மையான நோக்கம் குடும்பத்தை நடத்துவது மட்டுமல்ல, நம் குடும்பத்தினரின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதுதான் என்பதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் நிரூபித்துக் காட்டியுள்ளார். இரவும் பகலும் கடினமாக உழைத்து சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில், அவர் தன் தாய்க்கும் பாட்டிக்கும் ஒரு புதிய டிவியை வாங்கிக் கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

அந்த உணர்ச்சிகரமான தருணத்தைப் படம்பிடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் அந்த இளைஞர் புதிய டிவிக்கு அருகில் நின்று, “நான் ஸ்விக்கியில் வேலை செய்து கொஞ்சம் கொஞ்சமாகச் சேமித்த பணத்தில் இதை வாங்கினேன். என் அம்மாவும் பாட்டியும் ரொம்பவே சந்தோஷப்படுறாங்க” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

அவர் தன் பாட்டியிடம் வங்காள மொழியில் “சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்கும்போது, பாட்டியின் முகம் புன்னகையால் மலர்கிறது. உணர்ச்சிவசப்பட்ட அவரது தாயாரும், “நல்லா இருப்பா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று கூறி வாழ்த்தும் அந்த எளிய தருணம் பார்ப்பவர்களின் மனதைத் தொடுகிறது.

இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும் அந்த டெலிவரி ஊழியரின் கடின உழைப்பையும், குடும்பத்தின் மீது அவர் வைத்துள்ள அன்பையும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். “சிலர் ஆயிரக்கணக்கான கோடிகளைச் சம்பாதித்த பிறகும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை, ஆனால் இவர் ஒரு சிறிய டிவி வாங்கியதிலேயே பெரும் மகிழ்ச்சியைக் காண்கிறார்” என்று நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

“>

இன்னும் சிலர், “அவர் எவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார் என்பது அவருடைய வார்த்தைகளிலேயே தெரிகிறது; இறைவன் அவருக்கு மேலும் பல வெற்றிகளை வழங்க வேண்டும்” என வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.