நெல்லையில் இன்று சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
“நடிகர் விஜய் ஒரு புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். ஆனால் அவர் இன்னும் சினிமா பாணியில் பேசிய வண்ணம் இருக்கிறார். அவரிடம் அகந்தை அதிகமாக உள்ளது. அவர் முதலமைச்சரை மிரட்டும் போக்கில் பேசுவது, பா.ஜ.க-வின் இயக்கத்திலேயே நடப்பது என்பதைக் காட்டுகிறது.
மத்திய அரசு சிலரைக் கட்சி தொடங்கச் செய்து, தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறது. அமித்ஷா சொல்லி புஸ்ஸி ஆனந்த் மூலமாகத்தான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இது விஜய்-BJP தொடர்பை வலுப்படுத்துகிறது. விஜய் பிரதமர் மற்றும் முதலமைச்சரைப் பற்றி பேசும் போது கண்ணியத்துடனும், பொறுப்புடன் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். அவருக்கான புரோட்டோக்கால் வேறு, பிரதமருக்கானது வேறு. இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
‘தலைவா’ படம் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்ட போது கொடநாட்டில் மூன்று நாட்கள் காத்திருந்தவர்கள் நாங்கள் அல்ல. தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு ஆளும் கட்சி பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும் யாருக்கும் பயப்படவில்லை. பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை வழங்காமல், மாற்று தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. கவர்னர் எந்த விஷயமும் சரியாக அறியாமல், யாரோ எழுதி கொடுத்ததை மட்டுமே வாசிக்கிறார்.
மேலும் “குட்டம் முதல் ராதாபுரம் வரையிலான அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடக்கமாகும். பா.ம.க.வில் நிலவும் உட்கட்சி பிளவு மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பற்றி சட்டமன்றம் கூடியபோது விவாதிக்கப்படும்,” எனத் தெரிவித்தார்.
