டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டின் மீது சர்வதேசத் தடை மற்றும் நிதி முடக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) எச்சரிக்கை விடுத்துள்ளது.
10-ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றிருந்த வங்கதேச அணி, பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியா வர மறுத்தது. இதன் விளைவாக, அந்த அணியை உலகக்கோப்பைத் தொடரிலிருந்து ஐசிசி அதிரடியாக நீக்கிவிட்டு, மாற்று அணியாக ஸ்காட்லாந்தைச் சேர்த்தது.
வங்கதேசத்தின் இந்த நிலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு ஒரு விசித்திரமான முடிவை எடுத்தது. அதாவது, உலகக்கோப்பையில் மற்ற அணிகளுடன் விளையாடுவோம், ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இலங்கையில் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் புறக்கணிப்போம் எனத் தெரிவித்தது.
பாகிஸ்தான் அரசின் இந்த அரசியல் தலையீட்டிற்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணித்தால், பாகிஸ்தான் அணியைச் சர்வதேசப் போட்டிகளில் விளையாட முடியாதபடி மொத்தமாகத் தடை விதிக்க ஐசிசி ஆலோசித்து வருகிறது. : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி-யிடமிருந்து வழங்கப்பட வேண்டிய நிதி ஆதாரங்களை முழுமையாக முடக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டில் அரசியல் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்றும், பாகிஸ்தான் தனது முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐசிசி எச்சரித்துள்ளது உலகக்கோப்பைத் தொடர் தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா – பாகிஸ்தான் மோதல் குறித்து எழுந்துள்ள இந்தச் சிக்கல் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருகிற 15-ம் தேதி இந்தியாபாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ள நிலையில் ஐசிசி-யின் இந்த அதிரடி எச்சரிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் அரசு பணியுமா அல்லது வங்கதேசத்தைப் போலவே உலகக்கோப்பையிலிருந்து வெளியேறுமா என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.
