வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தை பிசிசிஐ கையாண்ட விதம், தேவையற்ற உலகக்கோப்பை குழப்பங்களுக்கு வித்திட்டுள்ளதாக ஐசிசி முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டு வீரர் முஸ்தாபிஜுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியிலிருந்து நீக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று, பிசிசிஐ அறிவுறுத்தலின் பேரில் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த நடவடிக்கை வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை (BCB) ஆத்திரமடையச் செய்தது. இதன் விளைவாக, இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையைப் புறக்கணிப்பதாக வங்கதேசம் அறிவித்தது. அவர்களுக்கு ஆதரவாகப் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுகுறித்து ஐசிசி-யின் முன்னாள் அதிகாரி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஊடக இயக்குநருமான சமி-அல்-ஹசன் பர்னி கூறியதாவது: “கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது போட்டி அமைப்பாளர்கள் இந்த விவகாரத்தில் இன்னும் கொஞ்சம் கவனமாகச் செயல்பட்டிருக்கலாம். முஸ்தாபிஜுர் ரகுமானை கே.கே.ஆர். அணியிலிருந்து நீக்குவது போன்ற முடிவுகளைப் பொதுவெளியில் அறிக்கையாக வெளியிட்டதைத் தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் தனிப்பட்ட முறையில் அணி நிர்வாகத்திடம் பேசி அந்த வீரரை விடுவிக்கச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த விஷயம் யாருக்கும் தெரிந்திருக்காது; சுமூகமாக முடிந்திருக்கும். ஆனால், ஜனவரி 3-ஆம் தேதி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்புதான் ஒட்டுமொத்தப் பிரச்சினையையும் தூண்டிவிடும் காரணியாக அமைந்துவிட்டது. சில நேரங்களில் எடுக்கப்படும் தவறான முடிவுகள், இது போன்ற விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன,” என அவர் தெரிவித்தார்.
பிசிசிஐ-யின் அந்த ஒரு அறிவிப்புதான் வங்கதேசத்தின் உலகக்கோப்பை விலகலுக்கும், பாகிஸ்தானின் புறக்கணிப்பு முடிவுக்கும் அடிப்படை காரணமாக அமைந்ததாக பர்னி சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது ஐசிசி-க்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், பர்னியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
