ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக், பாகிஸ்தான் அரசை இஸ்ரேலுடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளப் பதிவில் பாகிஸ்தான் அரசை கடுமையாகச் சாடியுள்ள நவீன் உல் ஹக், “இஸ்ரேலிய ஆட்சி முறைக்கும் பாகிஸ்தான் ஆட்சி முறைக்கும் இடையே எந்த ஒரு வித்தியாசத்தையும் கண்டறிவது கடினம்” என்று பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் இந்த கொடூரச் செயலை ஒரே வரியில் அவர் ‘கரெக்ட் செருப்படி’ கொடுத்துள்ளதாக ஆப்கான் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ராஷித் கான் இந்தச் சம்பவத்தை ‘போர்க் குற்றம்’ என்று வர்ணித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“புனிதமான ரமலான் மாதத்தில் மனித உயிர்களை மதிக்காமல் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் மிகவும் வேதனையளிக்கிறது. இது ஒரு கொடூரமான போர்க் குற்றம். ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இந்த அட்டூழியம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் என் நாட்டு மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். ஒரு தேசமாக நாம் இதிலிருந்து மீண்டு எழுவோம் என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடங்களுக்கு நேரில் சென்ற சில ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள், காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். பாகிஸ்தான் ராணுவம் தாருல் அமான், கைர்கானா மற்றும் காபூல் சர்வதேச விமான நிலையப் பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பின் செய்தித் தொடர்பாளர் மொஷரப் ஜைதி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் காபூலில் எந்த மருத்துவமனையையும் பாகிஸ்தான் இலக்கு வைக்கவில்லை என்று அவர் மீண்டும் ஒருமுறை விளக்கம் அளித்துள்ளார்.
