மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் சர்வதேச அளவில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஹார்முஸ் ஜலசந்திக்கு உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த கோரிக்கையை நட்பு நாடுகள் ஏற்க முன்வரவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள டிரம்ப் ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு விவகாரத்தில் அமெரிக்காவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா ஒரு கூட்டு பாதுகாப்பை விரும்பிய போதிலும் நேட்டோ அமைப்பு உறுப்பினர்கள் உதவாதது ஏமாற்றம் அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்கள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் மற்ற நாடுகளைத் தாக்கும் நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டிருக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளார். ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்றும் அதே வேளையில் ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வாரத்திற்குள் போர் முடிவடைய வாய்ப்பில்லை என்றும் ஈரானின் பல்வேறு பகுதிகளில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டதில் ஈரான் ராணுவம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் தொண்ணூறு சதவீதத்தையும் டிரோன் தாக்குதல்களில் தொண்ணூற்று ஐந்து சதவீதத்தையும் அமெரிக்கப் படைகள் தடுத்து அழித்துள்ளன. ஈரானின் வான்வழித் தடுப்பு சாதனங்கள் அனைத்தும் முற்றிலுமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் அமெரிக்கா தன்னிச்சையாகவே இந்தப் போரை எதிர்கொள்ளும் வலிமையுடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உலக நாடுகள் போதிய ஆர்வம் காட்டாத நிலையிலும் அமெரிக்கா தனது ராணுவ வலிமையால் இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.